தமிழக நிதி அமைச்சர் வெள்ளை அறிக்கையின் படி தமிழ் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் 2 இலட்சத்து 63 ஆயிரத்து 976 ரூபா கடன் உள்ளதாக அறிவித்திருந்தார்.
இதனால் நாமக்கல்லை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் தன்மீது உள்ள கடன் தொகையை செலுத்துவதற்காக காசோலையில் செலுத்துவதற்காக அதிகாரிகளிடம் சென்ற பொழுது பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தின் நிதிநிலை குறித்த 120 பக்கங்கள் கொண்ட வெள்ளை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று வெளியிட்டார். அதன்மூலம், தமிழ்நாடு அரசின் தற்போதைய கடன் சுமை ரூபா 5.75 லட்சம் கோடி ஆக உள்ளது என்றும் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் 2,63,976 ரூபா கடன் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் 2,63,976 ரூபாவுக்கான காசோலையுடன் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்தது கவனம் பெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் பொம்மைக்குட்டைமேடு என்ற பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ். இவர் காந்தி வேடம் அணிந்து கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு குடும்பத்துடன் வந்தார். அப்போது, கோட்டாட்சியர் கோட்டைகுமாரை சந்தித்தவர், தமிழ அரசின் வெள்ளை அறிக்கையில் கூறப்பட்டதை போல, எனது குடும்ப கடனான ரூ. 2,63,976 க்கான காசோலையை வழங்குகிறேன் எனக்கூறினார்.
ஆனால், அதை ஏற்க மறுத்த கோட்டாட்சியர் இந்த காசோலையை வாங்க தனது அதிகாரம் இல்லை என்றும், மாவட்ட ஆட்சியரிடம் வழங்க பாருங்கள் என கூறியுள்ளார். அதனையடுத்து ரமேஷ் அந்த காசோலையை மாவட்ட ஆட்சியரிடம் வழங்க முடிவு செய்துள்ளார்.
அது தொடர்பாக அவர் பேசியதாவது, பொதுமக்களும் முன்வந்து அரசு வைத்துள்ள கடனை செலுத்த வேண்டும் என்றும் அப்படி செலுத்துவர்களுக்கு ரூ. 15 லட்சத்தை கடனாக சுய தொழில் செய்ய வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். இதனால் பொதுமக்கள் சுய தொழில் செய்து பயனடைவார்கள் என அவர் கூறினார்.