இலங்கையில் இன்று முதல் முப்படையினர் மற்றும் பொலிஸாரின் பங்களிப்புடனேயே எரிபொருள் விநியோகிக்கப்படும் எனவும், இதற்காக ‘டோக்கன்’ முறை அறிமுகப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று அறிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் ஆலோசனையின் பிரகாரம் நேற்றிரவு கூடிய பாதுகாப்பு சபைக்கூட்டத்திலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சில் இன்று பிற்பகல் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே அமைச்சர் காஞ்சன மேற்படி தகவலை வெளியிட்டார்.
இலங்கையில் நாளுக்கு நாள் எரிபொருள் வரிசை நீள்வதால், எரிபொருள் நிரப்பு நிலைய வளாகத்தில் மோதல் சம்பவங்களும் இடம்பெற்றுவருகின்றன. மறுபுறத்தில் வீதிகளை மறித்து, மக்களும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டுக்கு வருமென கூறப்பட்டிருந்த எரிபொருள் தாங்கிய கப்பல்களின் வருகையும் தாமதித்துள்ளது. இதனால் எரிபொருள் வரிசை மேலும் நீண்டு, அமைதியின்மை ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே எரிபொருள் கப்பல்கள் நாட்டுக்கு வந்து, நிலைமை சீராகும்வரை, முப்படையினர் மற்றும் பொலிஸாரின் பங்களிப்புடன், டோக்கன் முறையில் எரிபொருள் விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.