மாத்தறை டச் கோட்டைக்குள் அமைந்துள்ள சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஒரே ஒரு தமிழ் அரசியல் கைதியாகிய தங்கவேல் நிமலனனை நேற்று ஞாயிற்றுக்கிமை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினா்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் சந்தித்தனா்.
வவுனியாவைச் சோ்ந்த தங்கவேல் நிமலன் என்பவரது வழக்கில் அவருடன் சோ்த்து மொத்தமாக 03 போ் உள்ள நிலையில், அவர் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டு மாத்தறை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். வழக்கில் சோ்க்கப்பட்டுள்ள மற்ற இருவரும் கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனா்.
மாத்தறை சிறைச்சாலையில் தங்கவேல் நிமலனைத் தவிர வேறு எந்த அரசியல்கைதிகளும் இல்லை என்பதுடன், மாத்தறை சிறைச்சாலையில் உள்ள ஒரேஒரு பயங்கரவாத தடைச்சட்ட வழக்கில் அடைக்கப்பட்டுள்ளவரும் அவா் மட்டுமே ஆவார். அந்தவகையில் ஒரு தனி தமிழ் நபராகவே அவா் இங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளதால் அவருக்கு மொழி சார்ந்த பிரச்சனைகளும் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து குறித்த அரசியல்கைதி முன்னணி எம்.பிகளிடம் தன்னை ஏனைய பயங்கரவாத வழக்குகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவா்களுடன் தன்னையும் சோ்த்து தங்கவைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விடயம் சம்பந்தமாக தாங்கள் அமைச்சா் அலி சப்ரியுடன் பேசுவதாக முன்னணி எம்.பிகள் குறித்த அரசியல்கைதியிடம் தெரிவித்துள்ளனா். அத்துடன் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படும் வரை அவா்களை அவா்களது சொந்தப் பிரதேச சிறைகளுக்கு மாற்றுமாறு வலியுறுத்துவோம் எனவும் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினா்கள் ஊடகங்களிற்கு கருத்துத் தெரிவித்துள்ளனா்.