திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கோணேஸ்வரம் கோவில் பிரதேச தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமான பிரதேசத்தில் உரிய ஆவணங்கள் இன்றி மரம் வெட்டிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்ததாக தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
மரம் வெட்டுவதற்கு பயன்படுத்திய பொருட்களையும் தலைமையகப் பொலிஸார் எடுத்துச் சென்றனர்.
இந்த மரம் சுமார் 100 வருடங்கள் பழமையானது என்பதுடன் மரத்தின் ஒரு கிளையானது முறிந்து விழுந்ததில் வீதியோர நடை பாதை வியாபாரத்திற்கு அபாயகரமானதாக காணப்பட்டதில் கடை உரிமையாளரினால் தொல்பொருள் திணைக்கள அதிகாரிக்கு தெரியப்படுத்தப்பட்டு அவரின் உத்தரவு பெயரில் அப்புரப்படுத்தியதாக கடை உரிமையாளர் தெரிவித்தார்.
எனினும் உரிய தொல்பொருள் திணைக்கள அதிகாரியிடமிருந்து மரம் தரிப்பதற்கான ஆவணங்கள் வழங்கப்படாது இருந்த காரணத்தினால் கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டதாக பொலிசார் கூறுகின்றனர்.
இது சம்பந்தமான தொல்பொருள் திணைக்கள அதிகாரியிடம் கருத்து கேட்டதில், ஆவணங்கள் வழங்கும் முன் மரம் வெட்டப்பட்டதாகவும் ஆவணங்களை நாளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாகவும் குறித்த மரம் மட்டுமே அகற்ற தாம் அனுமதி அளித்ததாகவும் மேலதிக மரங்கள் வெட்டப்பட்டிருந்தால் கடை உரிமையாளருக்கு எதிராக தாம் வழக்கு தொடர உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்ட நபருக்கு பிணை வழங்கப்பட்டுள்ள நிலையில் நாளை நீதிமன்றத்தில் முன்னிலையாகி உரிய ஆவணங்களை சமர்பிக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.