பிரிட்டனின் F-35 போர் விமானம் மத்தியதரைக் கடலில் வழக்கமான நடவடிக்கையின் போது விழுந்து நொறுங்கியதாக அந் நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
விமானி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, ரோயல் நேவி விமானம் தாங்கி கப்பலான HMS குயின் எலிசபெத்தில் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டுள்ளார். விபத்துக்கான காரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
இந்த சம்பவம் சர்வதேச கடல் பகுதியில் இங்கிலாந்து நேரப்படி புதன் காலை 10.00 மணிக்கு நடந்தது மற்றும் வேறு எந்த விமானமும் விபத்தில் சிக்கவில்லை. விமானம் புறப்பட்ட சிறுதி நேரத்திலேயே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் விமானி பாதுகாப்பாகவும், நலமாகவும் திரும்பியதை எண்ணி நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார். ஆனால் 100 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள போர் விமானம் இந்த சம்பவத்தின் போது கடலில் விழுந்து நொறுங்கியுள்ளது.