பொருளாதார வளா்ச்சியில் முன்னிலை வகிக்கும் அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான், கனடா மற்றும் இங்கிலாந்து ஆகிய 7 நாடுகளை உள்ளடக்கிய ‘ஜி7’ கூட்டமைப்பின் 46-வது உச்சி மாநாடு இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கடந்த ஜூன் மாதம் நடந்தது.
இந்த மாநாட்டில் சர்வதேச வரி விதிப்பு சீா்திருத்தம் தொடர்பாக வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தின்படி பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் லாபத்தில் குறைந்தபட்சம் 15 சதவீதம் வரி செலுத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இந்த ஒப்பந்தம் ‘ஜி20’ நாடுகளின் ஒப்புதலுக்காக முன்வைக்கப்படும் என ‘ஜி7’ கூட்டமைப்பு தெரிவித்திருந்தது.
இந்தநிலையில் பொருளாதாரத்தில் பெரிய நாடுகளாக திகழ்கிற ‘ஜி20’ நாடுகளின் உச்சி மாநாடு இத்தாலி தலைநகர் ரோமில் நேற்று முன்தினம் தொடங்கியது. கொரோனா தொற்று தொடங்கியதிலிருந்து ‘ஜி20’ நாடுகளின் தலைவர்கள் நேரடியாக கலந்து கொள்ளும் முதல் சந்திப்பு இது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்பட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
எனினும் சீன அதிபர் ஜின்பிங், ரஷிய அதிபர் புதின் ஆகிய இருவர் மட்டும் நேரடியாக கலந்து கொள்ளாமல் காணொலி வழியாக கலந்து கொண்டனர். 2-வது நாளாக நேற்றும் தொடர்ந்த இந்த மாநாட்டில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு 15 சதவீதம் வரிவிதிக்கும் ஒப்பந்தத்தை அமெரிக்கா முன்மொழிந்தது. இந்த ஒப்பந்தத்துக்கு ‘ஜி20’ நாடுகளின் தலைவர்கள் ஒரு மனதாக ஒப்புதல் அளித்தனர். இந்த ஒப்பந்தம் 2023-ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உலக பொருளாதாரத்துக்கு இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் ஒரு முக்கிய தருணம் என்றும், குறைவாக வரி வசூலிக்கும் நாடுகளுக்கு நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு ஓடும் பன்னாாட்டு நிறுவனங்கள் வரி பிரச்சினையை குறைக்கும் என்றும் அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஜனெட் யெல்லன் கூறினார். பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் லாபத்தை குறைவான வரி விதிக்கும் நாடுகளுக்கு திசை திருப்பிவிடும் பிரச்சினையைத் தொடர்ந்து இப்படி ஒரு ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வரும் மிகப் பெரிய நிறுவனங்களுக்கு வரி விதிப்பதில், அரசுகள் நீண்ட காலமாக சவாலை சமாளித்து வருகின்றன. தகவல் தொழில்நுட்ப புரட்சி ஏற்பட்டு, மிகப் பிரம்மாண்டமான பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் உருவானதை தொடா்ந்து, இந்த சவால் மேலும் அதிகரித்தது. தற்போதைய நிலையில், மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் எல்லா நாடுகளிலும் தொழில் செய்தாலும், மிகக் குறைந்த தொழில்வரி விதிக்கும் நாடுகளில் ஒரு கிளையை திறந்து அங்கு தங்களது லாபத்தை அறிவிக்க முடியும்.
அதன் மூலம், பிற நாடுகளில் பெற்ற லாபத்தையும் அந்த நாட்டில் கணக்கு காட்டி, குறைந்த தொழில் வரியை அந்த நிறுவனங்கள் செலுத்தி வருகின்றன. இதற்கு சட்டப்பூா்வமாக எந்த தடையும் இல்லை. இதனால், அந்த நிறுவனங்கள் பெருமளவில் தொழில் செய்து லாபம் ஈட்டும் நாடுகளுக்கு உரிய வரி கிடைக்காமல் போகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கிலேயே சா்வதேச வரி விதிப்பில் சீர்திருத்தம் செய்து இந்த ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. * நிறுவனங்கள் எந்த நாட்டில் செயல்பட்டு லாபம் ஈட்டுகிறதோ, அந்த லாபத்துக்கான வரியை அந்த நாட்டில்தான் செலுத்த வேண்டும்.
* குறைந்தபட்சம் 10 சதவீதம் லாபம் ஈட்டும் எல்லா பன்னாட்டு நிறுவனங்களுக்கும் இந்த விதிமுறை பொருந்தும்.
* நாடுகளிடையே தொழில் வரி விதிப்பில் ஏற்றத்தாழ்வுகளை களையும் வகையில், சா்வதேச குறைந்தபட்ச தொழில் வரி 15 சதவீதமாக நிா்ணயிக்கப்படவேண்டும்.