ஜனாதிபதி கோட்டாபயவினால் இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேம்ஜயந்த் நாளை முதல் தனது தொழில்வாண்மைமிக்க ‘சட்டத்தரணி’ தொழிலுக்கு மீளவும் திரும்பிச் செல்லவுள்ளதாக அறிவித்துள்ளார்.
கொழும்பில் அவரைச் சந்தித்த ஊடகவியலாளர் பதவி நீக்கம் தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
‘இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து என்னை நீக்கியிருப்பதாக ஊடகங்கள் வாயிலாக அறியக்கிடைத்தது. அது பெரிய விடயம் இல்லை. 2000 ஆம் ஆண்டு தான் நான் அமைச்சரானேன். நாளையில் இருந்து நீதிமன்றத்திற்கு செல்வேன். இந்தப் பதவிகள் எனக்கு ஒரு பிரச்சினை கிடையாது.
1991ஆம் ஆண்டு கோட்டே நகரசபைத் தலைவராக அரசியலுக்குள் பிரவேசித்த நான் மூன்று ஜனாதிபதிகளின் கீழ் பணியாற்றியுள்ளேன். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான கூட்டணிக்கு தலைமை தாங்கி தேர்தல் வெற்றிகளையும் பெறுவதற்கு உழைத்துள்ளேன்.
ஆகவே எனது தகுதியைப் பற்றி கூறவேண்டியதில்லை. அண்மையில் மரக்கறிகள், பொருட்களின் விலைகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது நான் உண்மையைச் சொன்றேன். விவசாயக் கொள்கையும் தீர்மானமும் தவறாகிவிட்டது என்று கூறினேன். நான் மக்களுக்காகவே பேசினேன் என்றார்.