கொரோனா தொற்று தீவிரமாக பரவிச்செல்வதால், எதிர்வரும் இரண்டு வாரங்கள் தீர்மானம் மிக்கதாகும். அதனால் முறையான தீர்மானங்களை எடுப்பதற்கு தாமதிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கொரோனா காரணமாக பல உயிர்கள் நாட்டில் இல்லாமல்போகும் என்பதை மறந்துவிடவேண்டாம் என பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
நாளாந்தம் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 2,500க்கும் அதிகம் இனம்காணப்பட்டு வருவதுடன், மரணிப்பவர்களின் எண்ணிக்கையும் 90ஐ தாண்டி இருக்கின்றது. இவ்வாறான நிலைமையில் எதிர்வரும் 14நாட்களுக்குள் வைரஸ் பரவலை கட்டுப்படுத்திக்கொள்வது மிகவும் முக்கியமாகும்.
நோயாளர்கள் அதிகரிப்பதை கட்டுப்படுத்தாவிட்டால் சுகாதார பிரிவினருக்கு இந்த நிலைமையை தாங்கிக்கொள்ள முடியாமல் போகும். அதேபோன்று முறையான தீர்மானங்களை எடுப்பதற்கு தாமதிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாட்டில் பல உயிர்கள் கொவிட் காரணமாக இல்லாமல்போகும் என்பதை மறந்துவிடக்கூடாது.
மேலும், கீழ் மட்டத்தில் கொவிட் பரவல் நிலைமையின் உண்மை தன்மையை தேசிய மட்டத்துக்கு கொண்டுவராததால் மக்களுக்கு தொற்று தொடர்பில் இருக்கும் அச்சம் குறைந்திருக்கின்றது.
அதனால் தற்போதைய முறைமையின் அடிப்படையில் நாட்டின் கீழ் மட்டத்தில் காணப்படும் கொரோனா பரவல் தொடர்பான உண்மையான தரவுகளை பொது மக்கள் அறிந்துகொள்ள இடமளிக்கவேண்டும் என சுகாதார அமைச்சு மற்றும் தொற்று நோய் ஆய்வு பிரிவிடம் நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம். – என்றார்.