“ஒரு அடையாள சொல்லாகத்தான் இலங்கை தமிழர்கள் என்று நான் அழைத்தேன். மற்றபடி தமிழர்கள் அனைவரும் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அவர்கள் அனைவரும் ஒருதாய் மக்கள் தான். தமிழக தமிழர்களும், இலங்கைத் தமிழர்களும் இனத்தால், மொழியால், பண்பாட்டால், நாகரிகத்தால் ஒன்றுபட்டவர்கள்.”
இவ்வாறு கூறியிருக்கின்றார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழகம் முழுவதும் உள்ள 106 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கு புதிய குடியிருப்புகள் கட்டும் திட்டத்தின் தொடக்க விழா வேலூர் மாவட்டம் மேல்மொணவூரில் இன்று நடைபெற்றது. அப்போது, புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களுக்காக 3,510 புதிய குடியிருப்புகள் மற்றும் 30 கோடி மதிப்பீட்டில் முகாம்களில் அடிப்படை திட்டப்பணிகளுக்காக முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
அதன் பின்னர் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது:
“நாம் அனைவரும் தமிழ் இனத்தைச் சேர்ந்தவர்கள். கடல்தான் நம்மைப் பிரிக்கிறது. நீங்கள் விட்ட கண்ணீர் இன்று நம்மை இணைத்துக் கொண்டிருக்கிறது. இலங்கைத் தமிழர்கள் தங்களுடைய தாயகத்தில் பாதிக்கப்பட்ட காலம் முதல் அவர்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இயக்கம்தான் திமுக. 1983 முதல் ஈழத்திலிருந்து இங்கு வந்தவர்களுக்காக முகாம்கள் அமைக்கப்பட்டன. சிலர் வெளியிலும் தங்கியிருந்தார்கள்.
அதனால், முழுமையாக இல்லாமல் ஓரளவுக்கு முகாம் வாழ் தமிழர்கள் தன்னிறைவு அடைந்தார்கள். ஆனால் கடந்த 10 ஆண்டு காலமாக அதிமுக அரசு அவர்களுக்காக எந்த நன்மையையும் செய்யவில்லை. அவர்களைப் பற்றி கவலை படவே இல்லை.
இந்நிலையில் திமுக அரசு பொறுப்பேற்ற உடன் இலங்கைத் தமிழர் நல்வாழ்வு திட்டங்களை மீண்டும் நாம் தொடங்கி இருக்கிறோம். அவர்கள் அகதிகள் அல்ல, அனாதைகள் அல்ல அவர்களுக்கு நாம் இருக்கிறோம் என்பதை உணர்த்துவதற்காக இத்திட்டங்களைத் தொடங்கியிருக்கிறோம்.
அகதிகள் முகாம் என்று இனி அழைக்க மாட்டோம், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என்று அழைப்போம் என சட்டமன்றத்தில் நான் அறிவித்தேன். அதனைச் செயல்படுத்தும் நாள் தான் இந்நாள். அதற்காகத்தான் இங்கு வந்திருக்கிறோம்.
கலைஞர் முதல்வராக இருந்த சமயத்தில் 1997-98 காலகட்டத்தில், முகாம்களில் வாழ்ந்தவர்களுக்காக 3,594 வீடுகள் கட்டித் தரப்பட்டன. 1998-99ஆம் ஆண்டு காலகட்டத்தில் 3,826 வீடுகள் கட்டித் தரப்பட்டன. 2009ஆம் ஆண்டு முகாம் வாழ் தமிழர்களுக்கு போதுமான வசதிகள் செய்து தர 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
தற்போது மீண்டும் திமுக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள 106 முகாம்களில் 19,046 குடியிருப்புகளில் மிகவும் பழுதடைந்த 7429 குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன.
முதல்கட்டமாக 290 சதுர அடி பரப்பளவில் 3510 வீடுகள் கட்டப்பட உள்ளன.
இலங்கைத் தமிழர் முகாம்களின் கட்டமைப்பு மேம்படுத்தப்படும். முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழ் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும். முகாமில் வாழும் தமிழர்களுக்கு கோ-ஆப்டெக்ஸ் மூலம் தரமான ஆடைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழர் நலவாழ்வு திட்டத்துக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முகாம் வாழ் தொழில் முனைவோர்களுக்காகத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.
மேலும் இலங்கைத் தமிழர்கள் ஆதரவற்றவர்கள் அல்ல, என்னை உங்களின் உடன் பிறப்பாக ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கூறினார் முதல்வர் ஸ்டாலின்.
இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து வேலூரில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது இலங்கைத் தமிழர் குடும்பத்தினரிடம் வாழ்வாதாரம், அடிப்படை வசதி உள்ளிட்ட விவரங்களைக் கேட்டறிந்த முதல்வர் அவர்களது குழந்தையைத் தூக்கிக் கொஞ்சி மகிழ்ந்தார்.