2020 இறுதிப் பகுதியில் கொழும்பு பேரை வாவியின் தென்பகுதியில் சூழலியல் மிதக்கும் தீவுகள் பரிகரிப்புச் செயற்றிட்டம் நடைமுறைப் படுத்தப்படுவது ஆரம்பமானது. பேரை வாவி இலங்கையின் தலைநகரான கொழும்பின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. மேற்படி செயற்றிட்டம் இலங்கைக்கான நீர்மாசடைதலுக்கான தீர்வுகாணும் இயற்கையை அடிப்படையாகக் கொண்ட செயற்றிட்டங்களுள் செலவு அடிப்படையில் சிக்கனமானதும் வினைத்திறனுடையதுமாகும்
சின்ஹுவா,(கொழும்பு) இலங்கையின் தலைநகர் கொழும்பின் மத்திய பகுதியில் அழகானதும் கவர்ச்சிகரமானதும் பிரபல்யம் வாய்ந்ததுமான பேரை வாவி அமைந்துள்ளது. இவ் வாவி 65 ஹெக்ரயர்களுக்கு மேற்பட்ட பரப்பளவில் பரந்து காணப்படுகின்றது. வாவியானது உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மனமகிழ்வையும் அமைதியையும் வழங்குவது மட்டுமன்றி நகர்ப்புற வாழ்க்கைக் கோலங்கள், நடைமுறைகள் காரணமாக உருவாகும் மனஅழுத்தங்கள், நெருக்கடிகள், தகைப்புக்கள் போன்றவற்றினின்று விடுபாட்டினையும் வழங்குகின்றது.
பேரை வாவி ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பதாக போர்த்துக்கேய ஆட்சியாளர்களால் கொழும்புக் கோட்டையைப் பாதுகாப்பதற்கான அரணாக நிர்மாணிக்கப்பட்டது. இன்று பேரைவாவி பல அமைதியான நீர்வாழ் பறவைகளது வாழிடமாகவும் சிறுவர் முதல் முதியவர்கள் வரை சகல வயதுப் பிரிவினரையும் கவரும் அழகிய நகர்ப்புறப் பூங்காவாகவும் திகழ்கின்றது.
வாவியினது சலனங்களற்ற அமைதியான நீர்ப்பரப்பு புள்ளி அலகு கூழைக்கடாக்கள், நீர்க்காகங்கள், கொக்குகள், நாரைகள் முதலான பல்வேறு பறவையினங்களையும் கவர்வனவாக உள்ளன. கூழைக்கடாக் கூட்டங்கள் வாவியின் மீதாகப் பறக்கும் பொழுது பார்க்கக் கிடைக்கின்றமை அதிர்ஷ்ட வசமானதாகும். முன்னைய காலங்களில் வாவி இன்றுள்ளவாறு அதீத கவர்ச்சி கரமானதாகக் காணப்படவில்லை. போர்த்துக்கீசர்கள் கோட்டையுள் ஊடுருவுபவர்களிடமிருந்து பாதுகாப்பைப் பெற்றுக்கொள்ளும் வகையில் வாவியில் முதலைகளை வளர்த்து வந்தனர்.

பின்னர் பிரித்தானியர்களது ஆட்சிக் காலப்பகுதியில் வாவி நீரில் சலவைத் தொழிலாளர்கள் ஆடைகளைத் தோய்த்து வந்தனர். பேரை வாவியின் சுற் றாடல்களில் காணப்பட்ட சேரிகளினின்றும் கழிவுநீர்கள் வாவியில் கலந்து வந்தன. இதனால் வரண்ட காலப்பகுதிகளில் நீரினின்றும் உவப்பற்ற துர்மணம் எழலாயிற்று.
தற்போது நிலைவரங்கள மாற்றமடைந்துள்ளன. பேரை வாவியினது உல்லாசப் பயணத்துறை சார்ந்த முக்கியத்துவத்தைப் பார்க்கும் பொழுது இலங்கை அரசாங்கம் வாவிநீர் மாசடைதலைக் கட்டுப்படுத்து வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சிலவருடங்களுக்கு முன்பதாக சுதேச நிறுவனங்களுடன்
சேர்ந்து ஈரநிலங்களது மிதக்கும் தீவுகள் பரிகரிப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்தத் தொடங்கினர். இச் செயற்றிட்டம் தீவிரமாக மாசடைந்த நீர்நிலைகளை தூய்மைப்படுத்துவதற்காக தாவரங்களைப் பயன்படுத்தும் தொழில்நுட்பமாகும். இது வாவியில் சூழலியல் மிதக்கும் தீவுகளது நிர்மாணிப்புக்களின் மூலம் நடைமுறைப் படுத்தப்படுவதாகும். 2018 இல் வாவியில் மிதந்தவாறு இருந்த ஈரநிலத்தீவுகளில் காணப்பட்ட வெட்டிவேர்த் தாவரங்களின் மீது சில தும்பிகள் பறந்து இறங்கியமையை அவதானித்ததன் பேரில் அவற்றின் மீது கவனம் ஈர்க்கப்பட்டது.
வெட்டிவேர் என்பது புற்றாவரத்திற்கான பொதுப் பெயராகும். இது சித்ரனெல்லா மற்றும் எலுமிச்சைப்புல் போன்ற ஒரு வாசனைப் புல்லாகும். தும்பிகள் சுற்றாடல் காரணிகளுக்கு உணர்திறன் கொண்ட பூச்சிகளாகும். இவற்றின் பிரசன்னம் நீர் தூயதாகக் காணப்படுவதைக் குறிப்பதாகும். சூழலியல் ஆய்வாளர்கள் இவ் அவதானம் தொடர்பாக தமது அதிகாரிகளுக்கு அறிவித்தனர். இத்தகைய அவதானிப்புக்களை பொதுமக்களும் மேற்கொண்டிருந் தனர்.

பேரை வாவியுள் சில மிதக்கும் தீவுகள் தோன்றத் தொடங்கியதிலிருந்து முன்னரிலும் பார்க்கக் கூழைக்கடாக்கள் வாவிக்கு வருவதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. வாவி முன்னரைப் போல பெரிதும் மாசடைந்த நிலையில் காணப்படாமை காரணமாக அதன் சுற்றாடலில் சஞ்சரிக்கும்போது மூக்கைப் பொத்திப் பிடித்தவாறு இப்போதெல்லாம் செல்ல வேண்டிருப்பதில்லை என சின்ஹுவாவிடம் கொழும்பில் கடமைபுரியும் திஸ்ஸ பெரேரா குறிப்பிட்டார்.
2020 இறுதியில் உள்ளுராட்சி அமைச்சு சூழலியல் மிதக்கும் தீவுகள் பரிகரிப்பு செயற்றிட்டத்தை பேரை வாவியின் தென்பகுதியில் ஆரம்பித்தது. இதன் விளைவாக ஏறத்தாழ ஒரு இரவுப் பொழுதுக்குள்ளாகவே பல மிதக்கும் தீவுகள் வாவியுள் தோன்றலாயின. இந்த மிதக்கும் தாவரவர்க்கப் படுக்கைகள் நீருக்கு ஆதாரமாக அமைந்தன. இவற்றுள் சில கரையோரங்களில் காணப்பட்ட அதேவேளை ஏனையவை வாவியின் மத்திய பகுதியில் மிதந்தன. சூழலியல் மிதக்கும் தீவுகள் யாவுமே அழகிய சிறிய தோட்டங்களாகும்.
சூழலியல் மிதக்கும் தீவுகளில் காணப்பட்ட நீர்த்தாவரங்கள் பிரதானமாக ஐரிஸ், மணிவாழை, வெட்டிவேர் ஆகியனவாகும் என்பது சின்ஹுவா நிருபர்களால் அவதானிக்கப்பட்டது. ஆகாயத்தின் நீலநிறப் பின்னணியிலும் பிரகாசமான சூரிய ஒளியின்கீழும் மஞ்சள், சிவப்பு, ஊதா நிறங்களிலான மணிவாழைப் பூக்கள் ரம்யமான காட்சிக்குக் காரணமானவை.
மிதக்கும் தீவுகள் இந்து சமுத்திரத்திலிருந்து வீசும் காற்றினால் மெதுவாக இழுபட்ட வண்ணமாக மிதந்தவாறாக ஆடிஅசைந்தவாறு காணப்படுபவை இவற்றின் மீது அமர்ந்துள்ள நீர்ப்பறவைகள் அமைதியாக அந்த அசைவுகளை அனுபவித்தவாறு காணப்படுகின்ற ரம்யத்தை அவதானிக்கலாம்.

தற்போது வாவியில் கூழைக்கடாக்கள் முன்னர் காணப்பட்ட அளவிலும் பார்க்க அதிக எண்ணிக்கையில் சஞ்சரிக்கின்றன. நூற்றுக்கணக்கான பறவைகள் கூட்டங்கூட்டமாக ஒழுங்கான இடைவெளிகளில் பவனி வருகின்றன. காலைவேளைகளில் புள்ளி அலகு கூழைக்கடாச் சோடிகள் அன்றைய போதுக்கான முதலாவது இரையைத்தேடி கால்துடுப்புக்களை வலித்தவாறு நீந்துவதை அவதானிக்கலாம். இவை உணவுண்ட பின்னர் மீண்டும் மிதக்கும் தீவுகளை நோக்கி நகரும். அல்லது உலங்குவானூர்தி ஒன்றின் வடிவில் ஒழுங்குற்றுப் பறந்து சென்று மிதக்கும் தீவுகளில் இறங்கிக் கொள்ளும்.
சூ டொங் சீனாவில் மாசடைந்த நீர்ச்சூழல் தொகுதிகளைத் திருத்துவதிலும் மீட்பதிலும் ஈரநிலங்களைத் திட்டமிட்டு நிர்மாணிப்பதிலும் நிபுணராவார். இவர் மிதக்கும் தீவுகள் தொடர்பாக அவற்றை வாவியை அடையும் கழிவுநீரைச் சுத்திகரிக்கக் கூடிய நீர்மேற்பரப்பில் மிதக்கும் பொருத்தமான ஈரநிலத் ;தாவரங் களையும் கலன்தாவரங்களையும் கொண்ட செயற்கை ஈரநிலங்களாக அடையாளப்படுத்துகின்றார்.
ஈரநிலத் தாவரங்களும் கழிவுப் பொருள்களின் துர்மணத்தைக் குறைக்கக் கூடியவை. இவை நீர்வாழ் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் உகந்த வாழிடங்களை வழங்குபவை. சூழலியல் மிதக்கும் ஈரநிலத்தீவுகள் நீரியல்ப் பூங்காக்களின் அழகியல் பெறுமானங்களையும் பொழுதுபோக்கு மற்றும் உல்லாசப்பயண விளைவுகளையும் உண்டுபண்ணுபவை.
சூ டொங் சூழலியல் நிபுணராக இலங்கையிலுள்ள பல்வேறு வாவிகளிலும் நீர்த்தேக்கங்களிலும் பொங்கு முகங்களிலும் பெருமளவு ஆய்வுகளை மேற்கொண்டவர் என்ற அடிப்படையில் மேற்படி செயற்றிட்டமானது இலங்கைக்கான நீர்மாசடைதல் களுக்கான தீர்வுகாணும் இயற்கையை அடிப்படையாகக் கொண்ட செயற்றிட்டங்களுள் செலவடிப்படையில் சிக்கனமானதும் வினைத்திறனானதும் ஆகும் என சிறப்பிக்கின்றார்.
(ராங் லூவும் ஜமீலா நஜிமுதீனும் எழுதியது)