முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குருந்தூர்மலைப் பகுதியில் அமைந்துள்ள குருந்தூர் குளத்தில் தூண்டில் போட்டு மீன்பிடிக்கச் சென்ற உள்ளூர் கிராம மக்களுக்கு இராணுவத்தினர் தடை விதித்துள்ளதோடு, மீன் பிடித்த ஆறுமுகத்தான்குளத்தைச் சேர்ந்த கிராமவாசிகளை தடிகளைக் கொண்டு மிரட்டி அனுப்பியுள்ளனர்.
இந்த குருந்தூர் குளத்துக்கு அண்மையாகவுள்ள குருந்தூர் மலையில் தொல்லியல் ஆய்வுகளை இராணுவமும், தொல்லியல் திணைக்களமும் இணைந்து மேற்கொண்டுவரும் நிலையில், அப்பகுதியில் காவலரண் அமைத்து தங்கியுள்ள படையினர் வலைகளைக் கொண்டும் தூண்டில் போட்டும் குளத்தில் ஜப்பான் மீன்களை தாம் பிடித்து உண்டுவரும் நிலையில், வாழ்வாதாரத்துக்காக தூண்டில் போட்டு மீன்பிடிக்கச் செல்லும் தம்மை அச்சுறுத்துவதாக கிராம வாசிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் 22 ஆம் திகதி மீன்பிடிக்கச் சென்றவர்களை அங்கு காவல் கடமையில் நின்ற இராணுவத்தினரின் ஏவலில் அவர்களோடு நின்ற பொலிஸார் இரண்டு பேர் மீன் பிடிக்கத் தடை செய்துள்ளனர்.
இதன்போது தடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகளை குளத்தில் கட்டி மீன்பிடிக்கும் நடவடிக்கையில் இனம் தெரியாதவர்கள் ஈடுபட்டிருந்ததாகவும் சட்டவிரோதமான அந்த நடவடிக்கையை தடுக்காத பொலிஸார் தூண்டில் போட்டு மீன்பிடிக்கவந்த தம்மை மிரட்டி தடை செய்ததாக கிராம வாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இராணுவம் வலைகளைப் பயன்படுத்தி இதே குளத்தில் மீன்பிடித்து உண்ண முடியும் என்றால் இதே கிராம உத்தியோகத்தர் பிரிவில் வாழும் தாம் ஏன் மீன் பிடிக்கத் தடைவிதிக்கப் படுவதாக ஆறுமுகத்தான்குள மீனவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதேவேளை, இந்தக் குளம் அமைந்துள்ள பகுதிக்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களை குளப் பகுதிக்குச் செல்ல முடியாது என இராணுவத்தினர் தடைவிதித்ததோடு அனுமதி பெற்றுவந்தால் தான் குளத்துக்கு செல்லலாம் என திருப்பி அனுப்பியுள்ளனர்.