எரிவாயு தொடர்பில் பரிசோதனை செய்வதற்கு எமது நாட்டில் சட்டப்பூர்வமான இரசாயன ஆய்வுக்கூடம் இல்லை. 1960 களில் இருந்து இந்நிலைமையே காணப்படுகின்றது என்று நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.
‘கேஸ் சிலிண்டர்’ வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று (29/11) விசேட உரையொன்றை நிகழ்த்துகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் இன்று நேற்று நடப்பவை அல்ல. பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அதற்காக தற்போது இடம்பெறும் வெடிப்பு சம்பவங்களை நான் நியாயப்படுத்தவில்லை. அது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளோம்.
1960 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை எமது எரிவாயு தொடர்பில் பரிசோதனை செய்ய நாட்டில் சட்டபூர்வமான இராசயன ஆய்வுக் கூடமொன்று இல்லை. இதுதொடர்பில் கடந்த வாரம் ஆய்வு செய்திருந்தோம். அந்த ஆய்வுகளின் முதல் முடிவு கடந்த சனிக்கிழமை வெளியானது. அதனை மொரட்டுவை பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைத்திருந்தோம். ஒரு அறிக்கையை வைத்து இது தொடர்பில் தீர்மானம் எடுக்கமுடியாது என்று அந்த பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.
அதன் பின்னர் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இரத்தினபுரி, குருநாகல், கம்பஹா, காலி, களுத்துறை, கொழும்பு ஆகிய மாவட்டங்களில் 12 மாதிரிகளை பெற்றுக்கொண்டு பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு அனுப்பி வைத்துள்ளோம். அநேகமாக அந்த அறிக்கை இன்று கிடைக்கலாம்.
அந்த அறிக்கையை மொரட்டுவை பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிவைக்கவுள்ளோம். இந்த வாரத்துக்குள் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். இதற்கு வழங்க வேண்டிய தற்காலிக தீர்வு, குறுங்கால தீர்வு, நீண்டநாள் தீர்வு என்பவற்றுக்கான ஆலோசனைகளை மொரட்டுவை பல்கலைக்கழகம் பெற்றுக்கொடுக்கும்.
எவருக்காவது ஆலோசனைகள் இருந்தால் எம்மிடம் முன்வைக்க முடியும்.”- என்றார்.