தபால்களில் அஞ்சல் தலை பயன்படுத்தும் வழக்கம் 19 ஆம் நூற்றாண்டில் இருந்து பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் உலகில் முதன் முதலாக பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் அஞ்சல் தலை தற்போது ஏலத்திற்கு வர உள்ளது. ‘பென்னி பிளாக்’ என்று அழைக்கப்படும் அந்த அஞ்சல் தலையில் இங்கிலாந்து ராணி விக்டோரியாவின் படம் அச்சிடப்பட்டுள்ளது.
இந்த அஞ்சல் தலையானது 1840 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் திகதி அனுப்பப்பட்ட கடிதத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த அஞ்சல் தலை வரும் டிசம்பர் 7 ஆம் தேதி ஏலத்திற்கு விடப்படும் என்றும், இது சுமார் 5.50 மில்லியன் முதல் 8.25 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை ஏலம் கேட்கப்படலாம் என எதிர்பார்ப்பதாக ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது. ‘பென்னி பிளாக்’ எனப்படும், இங்கிலாந்து நாணயமான ஒரு பென்னிக்கு விற்கப்பட்ட 3 அஞ்சல் தலை தொகுப்பில், இரண்டு ஏற்கெனவே அருங்காட்சியகத்தில் உள்ளன .
மூன்றாவது அஞ்சல் தலையை ஸ்காட்லாந்தைச் சேர்ந்த அரசியல்வாதியும், அஞ்சல் தலை சேகரிப்பாளருமான ராபர்ட் வாலஸ் வைத்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அந்த அஞ்சல் தலையை வாங்கிய அவர் பல்வேறு ஆய்வுகளுக்குப் பின் , அது உலகின் முதல் அஞ்சல் தலைகளில் ஒன்று என்பதை உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.