இலங்கையின் பொறுப்புக்கூறலுக்கான செயற்திட்டத்தை ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் பணியகம் உருவாக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில்நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக, கடந்த மார்ச் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம், இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
எதிர்கால நீதிமன்றச் செயற்பாடுகளுக்காக இலங்கையில் இடம்பெற்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள் மற்றும் தொடர்புடைய குற்றங்கள் தொடர்பான, ஆதாரங்கள், சாட்சியங்களை, சேகரித்துப், பகுப்பாய்வு செய்து பாதுகாக்கும் அலுவலகம் ஒன்றை உருவாக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் பணியகத்துக்கு ஆணை வழங்கப்பட்டிருந்தது.
அதற்கமையவே இந்த செயற்திட்டத்தின் பணிகள், ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் பணியகத்தினால், ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஜெனிவாவை தளமாக கொண்டு இந்த விசேட பொறுப்புக்கூறல் செயற்திட்டம் இயங்கும் என்றும் கூறப்படுகிறது. இதற்காக, ஐ.நா மனித உரிமைகள் பேரவைச் செயலகம், 2.8 மில்லியன் டொலர் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.