இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா அவர்கள் 2021 ஒக்டோபர் 02 முதல் 05ஆம் திகதி வரை இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். வெளியுறவு செயலாளராக அவர் இலங்கைக்கு மேற்கொண்டிருக்கும் முதலாவது விஜயம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விஜயத்தின்போது இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோரை வெளியுறவுச் செயலாளர் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேபோல தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் கௌரவ ஜீவன் தொண்டமான், வெளிவிவகார செயலாளர் அட்மிரல் (ஓய்வு) பேராசிரியர் ஜயநாத் கொலம்பஹே மற்றும் பாதுகாப்புச் செயலர் ஜெனரல் (ஓய்வு) G.D.H.கமல் குணரட்னே ஆகியோருடன் சுமூகமானதும் ஆக்கபூர்வமானதுமான சந்திப்புகளையும் வெளியுறவுச்செயலர் மேற்கொண்டிருந்தார்.
2021 ஒக்டோபர் 05ஆம் திகதி ஜனாதிபதியுடன் நடைபெற்றிருந்த சந்திப்பின்போது, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வான் மார்க்கமான மற்றும் கடல் மார்க்கமான தொடர்புகளை விஷ்தரிப்பதற்கான முன்மொழிவுகள் உட்பட பரஸ்பரம் பலன்களை வழங்கக்கூடிய திட்டங்களை துரிதமாக முன்னெடுத்துச் செல்வதற்கு இந்தியா முக்கியத்துவம் வழங்கியுள்ளதை வெளியுறவுச் செயலர் சுட்டிக்காட்டியிருந்தார்.
அதேநேரம் பாதுகாப்பு மற்றும் பாதுகாவல் போன்ற விடயங்களில் நெருக்கமான ஒத்துழைப்பையும் வழிகாட்டுதல்களையும் வழங்குவதற்காக வெளியுறவுச் செயலாளர் ஜனாதிபதிக்கு நன்றியினை தெரிவித்தார். முற்கூட்டியே மாகாணசபைத் தேர்தல்களை நடத்துதல், அதிகாரங்களை பகிர்தல் உள்ளிட்ட 13வது அரசியலமைப்பு திருத்தத்தின் சரத்துக்கள் அனைத்தையும் முழுமையாக அமுல்படுத்துவது குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டினை இந்த சந்திப்பின்போது அவர் மீளவலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.
2021 ஒக்டோபர் 4ஆம் திகதி பிரதமருடனான தனது சந்திப்பில், பௌத்தமத மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் 15 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடை உதவி தொடர்பாக அரசாங்கங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடுவதன் மூலம் இருநாட்டு மக்களிடையிலுமான உறுதியான தொடர்புகள் மேலும் வலுவாக்கப்படும் அதேநேரம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள், மக்கள்- மக்கள் இடையிலான தொடர்புகள் மூலமாக ஆணித்தரமான நிலையில் இருப்பதாக வெளியுறவு செயலாளர் சுட்டிக்காட்டினார்.
யாழ்ப்பாணத்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வலுவான கலாசார மற்றும் நாகரீக உறவுகளை நினைவூட்டிய வெளியுறவுச் செயலாளர், இந்திய நன்கொடை உதவியில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாணம் கலாசார நிலையத்தினை பராமரிப்பதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியா தனது ஆதரவினை வழங்கவுள்ளதாக அறிவித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் இருநாடுகளுக்கும் இடையிலான கலாசார உறவுகள் மேலும் வலுவடையும் வகையில் இந்தியாவின் குஷிநகருக்கு இலங்கையிலிருந்து முதலாவது விமானத்தை வரவேற்பதற்கு இந்திய அரசாங்கம் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நிதியமைச்சருடனான சந்திப்பின்போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வலுவான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டிருந்தது. அந்த அடிப்படையில் இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நன்கொடை அடிப்படையிலானதும் கடன் அடிப்படையிலானதுமான உதவித் திட்டங்கள் உட்பட சகல கூட்டு திட்டங்களையும் துரிதமாக முன்னெடுத்துச் செல்வதற்கு இரு தரப்பினரும் இணங்கியுள்ளனர்.
இதேபோல வெளிவிவகார அமைச்சர் மற்றும் வெளிவிவகார செயலாளர் ஆகியோருடனான சந்திப்புக்களின் போது, பெருநோயினால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார விளைவுகளை எதிர்கொள்வதற்கும் கொவிட்டினால் ஏற்பட்டிருக்கும் சவால்களை எதிர்கொள்ளுதல் உட்பட பரஸ்பர நலன்கள் அடிப்படையிலான சகல விடயங்கள் தொடர்பாகவும் பரந்தளவிலான பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இவ்விஜயத்தின்போது, தமது கலாசார, பொருளாதார மற்றும் வரலாற்று ரீதியான முக்கியத்துவத்தினை பிரதிபலிக்கும் வகையில் வெளியுறவுச் செயலாளர் கண்டி, திருகோணமலை, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களுக்கு பயணித்திருந்தார். கண்டியில் ஸ்ரீ தலதா மாளிகையில் வெளியுறவுச் செயலாளர் அவர்கள் விசேட பிரார்த்தனைகளில் ஈடுபட்டிருந்தார்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவானதும் முக்கியத்துவம் வாய்ந்ததுமான சக்தி பங்குடமையின் சின்னமாக கருதப்படும் திருகோணமலை எண்ணெய் தாங்கி தொகுதிகளை அவர் பார்வையிட்டிருந்த அதேவேளை அந்த எண்ணெய் தாங்கி தொகுதிகளின் அபிவிருத்தி தொடர்பாகவும் அதன் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்படும் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் LIOC நிறுவனத்தினர் வெளியுறவு செயலாளருக்கு விளக்கமளித்திருந்தனர். யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தின்போது வெளியுறவுச் செயலாளர் யாழ்ப்பாணம் கலாசார நிலையத்தினை பார்வையிட்டதுடன் வடமாகாண ஆளுநர், பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்வியாளர்கள் மற்றும் வர்த்தக பிரமுகர்களுடன் உரையாடல்களையும் மேற்கொண்டிருந்தார்.
தொழில்துறை அமைச்சர் கௌரவ நிமால் சிறிபால டி சில்வா; கல்வி அமைச்சர் கௌரவ தினேஷ் குணவர்தன; வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்; மீன்பிடித்துறை அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா; வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் கௌரவ சிபி.இரத்னாயக்க; சுகாதார அமைச்சர் டாக்டர் கெஹலிய ரம்புக்வெல்ல; பெருந்தோட்டத்துறை அமைச்சர் டாக்டர் ரமேஷ் பத்திரண; பல்வேறு இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆகியோரின் பிரசன்னத்துடன் அலரிமாளிகையில் நடைபெற்றிருந்த நிகழ்வொன்றில் இந்திய நன்கொடை உதவித் திட்டத்தின்கீழ் நிறைவேற்றப்பட்ட நான்கு அபிவிருத்தி ஒத்துழைப்பு திட்டங்களை அவற்றுடன் தொடர்புடைய அமைச்சர்களுடன் இணைந்து மெய்நிகர் மார்க்கமூடாக வெளியுறவுச் செயலாளர் அவர்கள் அங்குரார்ப்பணம் செய்துவைத்தார்.
இந்தத் திட்டங்களில் வடமாகாணத்திலுள்ள வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி, கண்டி- புசல்லாவை சரஸ்வதி மத்திய கல்லூரி ஆகியவை கல்வி அமைச்சருடன் இணைந்தும், இந்திய வீடமைப்பு திட்டத்தின் மூன்றாம் கட்டமாக முன்னெடுக்கப்பட்ட திட்டங்களின் ஒரு பகுதியான 1235 வீடுகளை தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களுடன் இணைந்தும், வவுனியா மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட மாதிரிக் கிராம அமைப்பு திட்டத்தின் கீழான வீடுகளை மெய்நிகர் மார்க்கமூடாக இணைந்திருந்த கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த ஹேரத் அவர்களுடன் இணைந்தும் வெளியுறவு செயலர் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
இத்திட்டங்களின் கூட்டு அங்குரார்ப்பண நிகழ்வில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்த வெளியுறவுச் செயலாளர், இலங்கையின் சமூக பொருளாதார அபிவிருத்திக்கு ஒத்துழைப்பினை வழங்குவதற்கான இந்திய அரசாங்கத்தின் நிலையான உறுதிப்பாட்டின் அடிப்படையில் இவ்வாறான புதிய வீடமைப்பு மற்றும் கல்வித்துறை சார்ந்த உட்கட்டமைப்பு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு கையளிக்கப்படுவதாக சுட்டிக்காட்டினார். இவ்வாறான திட்டங்கள் மக்களை மையமாக கொண்டதாகவும் இலங்கையுடனான பரந்தளவிலான அபிவிருத்தி குறித்த இந்திய பங்குடைமையை பிரதிபலிப்பதாகவும் அமைகின்றன.
2021 ஒக்டோபர் 2ஆம் திகதி மகாத்மா காந்தியின் 152வது பிறந்ததின நினைவு நாள் மற்றும் “ஆஷாதி கா அம்ரித் மஹோற்சவ்” அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் வெளியுறவுச் செயலர் ஶ்ரீ ஷிரிங்லா, வெளிவிவகார அமைச்சர், மீன்பிடித்துறை அமைச்சர், பெருந்தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஆகியோர் அலரி மாளிகையில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மலர்மாலை அணிவித்து அவரது அகிம்சை மற்றும் சமாதானம் தொடர்பான செய்தியினை நினைவூட்டியிருந்தனர்.
பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான கௌரவ ஆர்.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு, பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதிநிதிகள் குழு, மற்றும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகள் குழு ஆகியோருடன் வெளியுறவுச் செயலாளர் சந்திப்புக்களை நடத்தியிருந்தார்.
13ஆவது திருத்தத்திற்கு அமைவாக ஐக்கிய இலங்கைக்குள் சமாதானம்,நீதி,சமத்துவம் மற்றும் கௌரவம் ஆகியவற்றுக்கான தமிழ் சமூகத்தின் சகல அபிலாசைகளையும் பூர்த்தி செய்கின்ற நல்லிணக்கத்துக்கு இந்தியாவின் நிலையான ஆதரவினை வெளியுறவுச் செயலாளர் இச்சந்திப்புக்களின்போது மீளவலியுறுத்தியிருந்தார்
வெளியுறவுச் செயலருடன் சகல சந்திப்புக்களிலும் கலந்துகொண்ட அனைத்து தரப்பினருடனுமான பரந்ததும் சுமூகமானதுமான உரையாடல்கள் மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பு திட்டங்களின் கூட்டு அங்குரார்ப்பணம் ஆகியவை பரஸ்பரம் நன்மையளிப்பதும், நெருக்கமானதும், நட்புரீதியிலுமான இந்திய இலங்கை உறவுக்கு மேலும் உத்வேகத்தை வழங்குமென்பது குறிப்பிடத்தக்கது.